உக்ரைன்: உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் அங்கிருக்கும் தந்தை தன் மகளின் எதிர்காலத்திற்காக கெஞ்சும் வீடியோ சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணுவத் தாக்குதல்:
நேற்றிலிருந்து ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் உள்ளிட்ட நகரங்களில் ராணுவத் தாக்குதலைத் துவக்கியுள்ளது. உக்ரைன் மீது குண்டு மழை பொழியும் வீடியோக்களும், அதிரும் கட்டிடங்களின் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் புகைப்படங்கள்:
சில இடங்களில் குண்டின் காரணமாக கட்டடங்கள் முழுவதும் புகைமூட்டத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. கியேவ் மெட்ரோ நிலைத்தில் மக்கள் பதற்றத்துடன் குழந்தைகளை சுமந்துகொண்டு அங்கும் இங்குமாக சிதறி பரபரப்பாக ஓடி வரும் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.
உக்ரைனில் நடந்து வரும் இந்த போரில் இதுவரை 10 இராணுவ அதிகாரிகள் உட்பட 137 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 316 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். இந்த நிலையில் உக்ரேனிய தந்தை என் மகளை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்லுங்கள் என அழுத நெஞ்சை உருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், உக்ரேனிய தந்தை தான் இந்த போரில் உயிருடன் இருப்போமோ இல்லையா என தெரியாத நிலையில் கடைசியாக தனது மகளை கட்டிபிடித்து தேம்பி தேம்பி அழுது கொண்டிருக்கிறார். அதோடு அந்த வீடியோவில், 'என் மகளை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லுங்கள்' என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைன் நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்ல அரசு முயற்சி செய்து வருகிறது. உக்ரைன் மக்களும் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர்.