கொடுமையான இந்த கொரோனா பிரச்சனையை எதிர்த்துப் போராடுவதற்கு மக்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். தனது தாய் அறக்கட்டளை மூலம் நிதி உதவி, பொருள் உதவி , நேரடி உதவி என்பது மட்டுமல்லாமல் சொந்த ஊருக்கு திரும்பி வர முடியாமல் பசி பட்டினியால் சிக்கித் தவித்த தமிழர்களுக்கு உதவிக் கரம் என எல்லா வகையிலும் உதவி செய்து வருகிறார்.
இந்த அன்பும், கருணையும், மனித நேயமும் இறைமைக்கு ஒப்பானது. வள்ளலார் முதல் சுவாமி ராகவேந்திரர் வரை புத்தர் முதல் சித்தர் வரை இதைத்தான் போதிக்கின்றனர். இன்று வியாழக்கிழமை. ராகவா லாரன்ஸின் வாழ்க்கையை திருப்பிப் போட்ட மகானுக்கு உகந்த நாள். இன்று தன் ட்விட்டர் பதிவில் லாரன்ஸ் இவ்வாறு பதிவிட்டிருந்தார்,
‘இனிய வியாழக்கிழமை, ராகவேந்திர சுவாமிக்கு ஒரு கோவில் கட்ட வேண்டும் என்பதே எனது மிகப் பெரிய ஆசை. எனது ராகவேந்திர சுவாமி சிலையை இன்று சமூக ஊடகங்களில் பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த சிலை உருவாக்கத்துக்கு தலைவர் சூப்பர் ஸ்டார் முகமாக இருந்தார் என்பதை நினைவுகூர்ந்து நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். சேவைதான் கடவுள்’ என்று பதிவிட்டிருந்தார்.