இந்திய கிரிக்கெட் அணி, விரைவில் தென் ஆப்ரிக்க சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அந்த சுற்றுப் பயணத்தில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் இந்திய அணி விளையாட இருக்கிறது.
முதலில் டெஸ்ட் தொடர் தான் நடக்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் ஞாயிற்றுக் கிழமை, அதாவது கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாளான 26 ஆம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் அபார வெற்றி பெற்று ஃபார்மில் உள்ளது.
மேலும் தொடர் வெற்றிகளின் மூலம் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமான ஐசிசி- யின் டெஸ்ட் அணிகளுக்கான தர வரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்து கெத்து காட்டியுள்ளது. இதனால் தென் ஆப்ரிக்காவிலும் இந்திய அணியின் ஆதிக்கம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்திய அணியில் தற்போது ஓர் சர்ச்சையும் நிலவி வருகிறது.
இந்திய ஒருநாள் அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவர் இனிமேல் டெஸ்ட் அணிக்கு மட்டும் தான் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. துணை கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா இனி இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக இருப்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ‘கேப்டன்ஸி’ சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில், வேறு ஒரு சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் டீன் எல்கர், இந்தியாவின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினைப் பற்றிப் பேசியுள்ளார்.
அவர், ‘அஸ்வின், தென் ஆப்ரிக்காவில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வெற்றிகரமான பவுலர் என்று சொல்வதற்கு இல்லை. அது எங்களுக்குச் சாதகமானதாக இருக்கும். இந்தியாவில் அவர் எங்கள் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஆபத்தாக இருந்திருக்கலாம். அதை வைத்து அவர் இங்கேயும் அப்படி இருப்பார் என்று சொல்ல முடியாது. அவர் மீது மட்டும் நாங்கள் கவனம் செலுத்திக் கொண்டிருக்க முடியாது.
எங்கள் கேம் பிளானில் நாங்கள் கவனம் செலுத்தியாக வேண்டும். இந்திய அணி, மிக வலுவாக உள்ளது. அஸ்வின் மிகச் சிறந்த பந்து வீச்சாளர். இந்தியா சார்பில் இதுவரை விளையாடியதிலேயே அஸ்வின் தான் மிகவும் அசத்தலான ஆஃப் ஸ்பின்னராக இருக்கிறார் என நினைக்கிறேன். அவரின் திறன்கள் குறித்து நாங்கள் கவனமாக இருப்போம். அவரை எதிர்த்து விளையாடுவது கண்டிப்பாக ஓர் சவாலாக இருக்கும்’ என்று அஸ்வினை எதிர்த்து விளையாடுவதில் உள்ள சாதக பாதகங்களை விளக்கி உள்ளார்.